இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினமான நாளை 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதிகளை, அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைகளின் திறந்தவெளியில் பார்வையிடுவதற்கு அனுமதிக்கவுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அன்றையதினத்தில் சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும்
இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கைதி ஒருவர் படி, அக்கைதிகளின் உறவினர்களோ மற்றும் நண்பர்களோ 3 பேர் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். இதேவேளை கைதிகளின் உறவினர்களோ, நண்பர்களோ கொண்டு வரும் உணவு மற்றும் ஆடைகளின் பொதி, ஒருவருக்கேற்ற அளவில் இருக்கும் வகையில் வழங்க வேண்டுமென்பதுடன், தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைச்சாலை வளாகங்களுக்குள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.