பாகிஸ்தானில் கடந்த வாரம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலை அடுத்து அரசு ஒன்றை அமைப்பதற்கு நவாஸ் ஷரீப் மற்றும் பிலவால் பூட்டோ சர்தாரி கட்சிகள் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளன.
நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு அளிப்பதாக பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசை பதவி நீக்கிய கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறை அனுபவித்து வருகிறார்.
எனினும் இந்தப் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்களே அதிக ஆசனங்களை வென்றிருந்தனர்.
இந்நிலையில் தேசத்தின் நலனை கருதி இரு கட்சிகளும் ஒன்றிணைவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி நேற்று முன்தினம் (13) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நவாஸ் ஷரீப் தனது சகோதரர் ஷெபாஸ் ஷரீபை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க திட்டமிட்டிருப்பதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி அதிகாரியான மரியும் அவுரங்கசிப் குறிப்பிட்டுள்ளார். ஷெபாஸ் ஷரீப் இதற்கு முன்னர் 2022 ஏப்ரல் தொடக்கம் 2023 ஓகஸ்ட் வரை பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரை நியமிப்பதில் ஆதரவு வழங்குகின்றபோதும் எந்த அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லை என்று பூட்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தொடர்ந்து கூறிவரும் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டிருப்பதோடு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் அதிகபட்சமாக 266 ஆசனங்களில் 93 இடங்களை வென்றனர்.
எனினும் இந்தத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் வென்றன.
தவிர பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படும் 70 போனஸ் ஆசனங்களும் கட்சிகள் இடையிலேயே பகிர்ந்தளிக்கப்படுவதோடு சுயேச்சை வேட்பாளர்களுக்கு அந்த ஆசனங்கள் கிடைப்பதில்லை. இது இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதில் நாட்டின் பலம்மிக்க இராணுவம் நவாஸ் ஷரீபுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிடப்படுகிறது.