“நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன்” என நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, “சைரன் திரைப்படம் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன்.
இந்தப் படம் குடும்பப் படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார். அவர் இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளராக இருக்கிறார். இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இன்னும் நல்ல திரைப்படங்களை எடுப்பார். இனி பெரிய மேடைகளில் அவரைக் காணலாம். அவரின் முழு உழைப்பால்தான் இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நடிக்க வேண்டும் வேண்டும். கீர்த்தி அந்த கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று நினைத்தோம். அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச் சிறந்த உழைப்பாளி. சமுத்திரக்கனி நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துகளைச் சொல்பவர். அதற்கு நேர்மாறாக கேரக்டரில் அவரை நடிக்க வைத்துள்ளோம். ‘என்னைப் போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே’ என்றார். ஆனால் எனக்காக நடிக்க வந்தார்.
நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவுதான். இயக்குநரின் உழைப்புதான் படம் வெற்றி பெறக் காரணம். யோகிபாபுவும் நானும் ட்வின்ஸ் மாதிரி ஒன்றாகவே இருந்தோம். எனக்கும் இப்படம் புது அனுபவம்தான். உங்கள் அனைவருக்கும் சைரன் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றார்.