ஐரோப்பாவின் முன்னோடி செய்மதி ஒன்று இன்றைய தினத்திற்குள் பூமியில் விழவுள்ளது.
1995 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஈ.ஆர்.எஸ்.-2 கண்காணிப்பு செய்மதி, 2011 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை முடித்துக் கொண்ட நிலையில் படிப்படியாக பூமியை நோக்கி சரிந்து வந்த சூழலிலேயே, கட்டுப்பாட்டை இழந்து பூமியை நொக்கி விழவுள்ளது. இரண்டு தொன் எடை கொண்ட இந்த செய்மதியின் பெரும்பகுதி வளிமண்டலத்திலேயே எரிந்து அழிந்து விடும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் சில பாகங்கள் அந்த வெப்பத்தை தாங்கி பூமியில் விழ சாத்தியம் இருந்தபோதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்த மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பகுதியை கடல் சூழ்ந்திருக்கும் சூழலில் அந்தப் பாகங்கள் பூமியின் எந்தப் பகுதியிலும் விழ வாய்ப்பு உள்ளது.