இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கும் சூழலில், போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக அமெரிக்க தூதுக் குழு ஒன்று நேற்று (22) இஸ்ரேலை சென்றடைந்தது.
மறுபுறம் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய உடன்படிக்கை ஒன்றில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் போர் அமைச்சரவை உறுப்பினரான பென்னி கான்ட்ஸ் ஜெரூசலத்தில் வைத்து தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்தில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல் காரணமாக அங்கு ஏற்பட்டிருக்கும் பெரும் உயிரிழப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்று அங்கு கூடாரங்களில் மக்கள் நிரம்பி வழிந்து வருகின்ற சூழல் கவலையை அதிகரித்துள்ளது.இந்த நகர் காசாவில் இஸ்ரேலிய தரைப்படை புகாத ஒரே நகராக இருப்பதோடு எகிப்து வழியாக காசாவுக்கு உதவிகள் வரும் வாயிலாகவும் காணப்படுகிறது.
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாத பட்சத்தில் ரபா நகர் மீது தரைவழி படை நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
வீடுகள் இலக்கு
எனினும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் குறித்து ரபா குடியிருப்பாளர்கள் நேற்று குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கப்பட்டனர். அந்த நகரின் கடற்கரைப் பகுதிகள் கூட இஸ்ரேலிய கடற்படை படகுகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகின.
ரபாவில் உள்ள அல் நூர் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றை அடுத்து அங்கு பதிவு செய்யப்பட்ட வீடியோவை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் அந்த வீடு தரைமட்டமாக்கப்பட்டிருப்பதும், கொல்லப்பட்டவர்கள் வெள்ளை அல்லது கறுப்பு போர்வைகளால் போர்த்தப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அல் நூர் குடும்பத்தைச் சேர்ந்த தனது மனைவி நூர், தனது ஒரு வயது மகள் மற்றும் மனைவியின் பெற்றோர்கள், சகோதரர் மற்றும் மற்ற உறவினர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அப்துல்ரஹ்மான் ஜூமா குறிப்பிட்டார்.
இரத்தம் தோய்ந்த வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட தனது மகளின் உடலை சுமந்த வண்ணம் இருந்த ஜூமா, “எனது மடியில் இருக்கும் இவள் எனது ஆன்மாவை எடுத்துச் சென்றுவிட்டாள். இவளுக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது” என்று குறிப்பிட்டார்.
மறுபுறம் கான் யூனிஸ் நகரில் இருந்து மேற்காக மவாசிக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதாக உள்ளூர் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னர் இந்தப் பகுதி பாதுகாப்பான இடம் என்றும் மக்களுக்கு அடைக்கலம் பெறும்படியும் இஸ்ரேல் அறிவுறுத்தி இருந்தது.
டாங்கிகள் கடற்கரை வீதியை அடைந்த நிலையில் அது காசாவின் மற்ற பகுதிகளில் இருந்து கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களை துண்டிப்பதாக இருந்தது. எனினும் அந்த டாங்கிகள் சில மணி நேரங்களில் அந்தப் பகுதியில் இருந்து வாபஸ் பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
காசாவின் தென் பகுதியில் பல வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 20 பேர் வரை கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
மத்திய காசாவில் காதிபான் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர்.காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 90க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது. இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,410 ஆக உயர்ந்திருப்பதோடு மேலும் 69,465 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்குக் கரையிலும் சூடு
காசாவில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய படைகள், மத்திய காசாவில் செயல்பட்டு வரும் நான்கு ஹமாஸ் படைப்பிரிவுகளையும் தோற்கடிக்கவில்லை என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. வடக்கில் உள்ள காசா நகரின் செய்தூன் பகுதியில் பலஸ்தீன போராளிகள் கடந்த புதனன்று நடத்திய மூன்று தாக்குதல்களில் இஸ்ரேலிய படைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கான் யூனிஸின் தென் பகுதியிலும் மோதல் தீவிரமாக இடம்பெற்று வருவதோடு இஸ்ரேலிய சிறப்புப் படைகள் மற்றும் துருப்புகள் மீது பலஸ்தீன போராளிகள் பதுங்கியிருந்து ரொக்கெட்டுகள், ஆர்.பீ.ஜீக்கள் மற்றும் சிறு ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஐ.நா நிறுவனங்கள் உட்பட 18 மனிதாபிமான உதவி அமைப்புகள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், காசாவில் நீர் உட்பட உயிர் வாழ்வதற்கு அவசியமான அடிப்படை தேவைகளில் கடும் பற்றாக்குறை நிலவி வருவதாக எச்சரித்துள்ளன.
“உலகமே பார்த்திருக்கும்போது காசாவில் உள்ள பொதுமக்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஒன்றில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மாலே அடுமின் குடியேற்றத்திற்கு அருகில் நெடுஞ்சாலை ஒன்றில் வாகன நெரிசலில் சிக்கிய கார் ஒன்றின் மீது மூன்று ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இஸ்ரேலிய படையினர் இரு துப்பாக்கிதாரிகளை சுட்டுக் கொன்றதாகவும் மூன்றாவது நபரை கைது செய்ததாகவும் அது கூறியது.
காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை மற்றும் குடியேற்றவாசிகள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 சிறுவர்கள் உட்பட 394 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ரமழான் மாதத்தில் ஜெரூசலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு பலஸ்தீனர்கள் நுழைவதில் இஸ்ரேல் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் அது காசா போருக்கு மத்தியில் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று ஜோர்தான் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
“அல் அக்ஸா பள்ளிவாசலில் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால், அது மோதல் முழு பிராந்தியத்திற்கும் விரிவடையும் சாத்தியத்தை கணிசமாக அதிகரிக்கும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
தொடரும் பேச்சு
வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு
மற்றும் வட ஆபிரிக்காவுக்கான இணைப்பாளர் பிரெட் பக்கேர்க் நேற்று இஸ்ரேலை சென்றடைத்தார். போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவர் எகிப்து சென்ற நிலையிலேயே இஸ்ரேலை அடைந்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே கெய்ரோவில் இருப்பதாக அந்த அமைப்பு கூறியது.
பணயக்கைதிகளை மீட்பதற்கான புதிய திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் முயற்சி இடம்பெற்ற வருவதாக இஸ்ரேலின் கான்ட்ஸ் குறிப்பிட்டார்.
“முன்னேற்றப் பாதைக்கான சாத்தியத்தை காண்பிக்கும் முதல் சமிக்ஞையை நாம் காண்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணயக்கைதிகளை விடுவித்து, மனிதாபிமான உதவியைப் பெற முடியுமான தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விபரம் அளிக்க அவர் மறுத்துள்ளார்.
எனினும் ஹமாஸை அழித்து பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இராணுவம் தொடர்ந்து போராடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி வருகிறார்.
நெதன்யாகு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை முன்வைத்த, பலஸ்தீன நாடு ஒன்றுக்கான ஒருதலைபட்சமான அங்கீகாரத்தை எதிர்க்கும் பிரேரணைக்கு அதிகப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான விரிவான அமைதித் திட்டம் ஒன்றுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகமும் அரபு நாடுகளின் சிறு குழு ஒன்றும் பணியாற்றி வருவதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்ட நிலையிலேயே இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் பலஸ்தீன நாடு ஒன்றை அமைப்பதற்கு உறுதியான கால எல்லை ஒன்றை வகுப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.