தனிமைப்படுத்தப்பட்ட பிரித்தானிய தீவுப் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள், தாங்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் மறக்கப்பட்டவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதை உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவுக்கு அகதிகளின் நலன்களை பார்வையிடச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்குள்ள நிலைமைகள் பற்றியும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தன்னிச்சையான காவலில் வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.
மேலும், அங்கு பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளைத் துன்புறுத்துதல் மற்றும் சுய-தீங்கு மற்றும் தற்கொலை முயற்சிகள் என்பன இடம்பெறுவதாகவும் குறித்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இந்த டியாகோ கார்சியா தீவானது இங்கிலாந்து - அமெரிக்க இராணுவத் தளமாகப் பயன்படுத்துவதோடு தற்போது இந்த தீவு புகலிடக்கோரிக்கையாளர்களின் முகாமாகவும் விளங்குகிறது.
இந்த முகாமில் உள்ள 61 பேரில் பெரும்பான்மையோர் இலங்கைத் தமிழர்களாவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் டியாகோ கார்சியாவில் தரையிறங்கி கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்களின் படகு சிக்கலில் சிக்கியதால் இந்த தீவில் தடுத்து வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், இது அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டது எனவும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனத்துக்கு பொருந்தாது எனவும் பிரித்தானிய அரசாங்கம் வாதிட்டு வருகிறது.
எனவே அகதிகளை குடியேற்ற பொருத்தமான மூன்றாவது நாடு ஒன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.