யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இன்று 23.02.2024 இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலையே குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தவேளை சம்பவ இடத்திற்கு மருதங்கேணி பொலிசார் சீருடையிலும் சிவில் உடையில் வந்திருந்தனர்.
சம்பவம் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு இணைய ஊடகவியலாளரை செய்தி சேகரிக்க விடாது சிவில் உடையில் வந்த பொலிசார் தடுத்தது நிறுத்தி அவரது தொலைபேசியையும் பறித்து அதில் பதிவு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழித்துள்ளதுடன் அவரது ஊடக அட்டை, மோட்டார்சைக்கிள் பத்திரங்கள் பறிமுதல் செய்து சிறிது நேரத்தில் மீண்டும் ஒப்படைத்துள்ளதுடன் அவர் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை பணி செய்ய விடாது தடுத்து அச்சுறுத்திய பொலிசார் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சிவில் உடையில் வந்த போலீசார் தலைக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியமையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.