பலஸ்தீன அகதிகளால் நிரம்பி வழியும் தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் அதற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
“இந்தப் பகுதியில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக” பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டி இருப்பதோடு, இது பொதுமக்களிடையே பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஹங்கே ப்ருயின்ஸ் ஸ்லொட் எச்சரித்துள்ளார்.
ரபா மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் சவூதி அரேபியா மற்றும் ஓமான் எச்சரித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியில் இன்னும் தனது படை நடவடிக்கையை முன்னேடுக்காத பிரதான நகராக இருக்கும் ரபா மீது தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்தே தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ரபா நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ரபாவின் கிழக்கில் உள்ள அடைக்கலம் பெற்ற மக்கள் வசித்த வீடு ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை (10) இரவு இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
ரபாவில் திட்டமிட்ட வகையில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனி நபர்கள் இலக்கு வைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் தலைவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபா நகரில் மக்கள் ஒழுங்கை குழப்பும் வகையிலேயே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் நகரின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிஸ் திணைக்களம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரபா மீதான படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலையை வெளியிட்டுள்ளன.
எனினும் ரபாவில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு ‘பாதுகாப்பான வழி’ ஏற்படுத்தப்படும் என்று நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏ.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரபா நகருக்கு இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் தனது திட்டத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.
“பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி நாம் இதனைச் செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
காசா பகுதியின் எல்லையாக இருக்கும் ரபாவில் அந்தப் பகுதியின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் அந்த நகர் மீது தாக்குதல் தொடுத்தால் மக்கள் அங்கிருந்து வெளியேற இடம் இல்லாத நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
‘புதைகுழி தான் மிச்சம்’
இந்நிலையில் எகிப்துடனான ரபா எல்லை வேலியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் தனது கடைசி அடைக்கலமாக பல டஜன் கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்னவே இஸ்ரேலிய தாக்குதல்களால் பல முறை இடம்பெயர்ந்த நிலையிலேயே இங்கு வந்துள்ளனர்.
காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான 14 கிலோமீற்றர் நீண்ட எல்லையான பிலடொல்பி இடைவழி நிலப்பகுதியை ஒட்டியே சலேஹ் ரசைனா என்பவரும் கூடாரம் அமைத்துள்ளார். அவர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் ஆறு முறை இடம்பெயர்ந்துள்ளார்.
பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிய பயணத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் உடல் மற்றும் உள ரீதியில் பலவீனம் அடைந்துள்ளனர்.
“நான் ஜபலியாவில் இருந்து (வடக்கு காசா) வந்தேன். வடக்கு காசாவில் இருந்து தெற்கு வரை காசா நகர், டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் வரை இடம்பெயர்ந்து இப்போது ரபாவுக்கு வந்திருக்கிறேன். நாம் வந்த சில நாட்களிலேயே இங்கு தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று 42 வயதாகும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரசைனா, மிடில் ஈஸ்ட் ஐ செய்தி இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.
ரபாவில் தற்போது 610,000 சிறுவர்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் சிக்கி இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப்பிடுகிறது. இந்த நிலப்பகுதி காசாவின் மொத்த நிலப் பரப்பில் ஐந்தில் ஒன்றுக்கும் குறைவான இடம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
“நான் இனியும் வேறு எங்கும் போகப்போவதில்லை. நான் ஏற்கனவே ஆறு தடவைகள் இடம்பெயர்ந்து விட்டே. எம்மால் அடைய முடியுமான கடைசி இடம் இது தான்” என்றார் ரசைனா.
“நாம் எகிப்துடனான எல்லைக்கு வந்தது இது பாதுகாப்பான இடம் என்று நம்பியாகும். இஸ்ரேலால் துரத்த முடியுமான கடைசி இடம் இது தான். இப்போது அவர்களால் மேலும் துரத்த முடியாது. எம்மாலும் இனி நகர முடியாது. இங்கிருந்து எம்மால் புதைகுழிக்குத் தான் செல்ல முடியும். இது எமது கடைசி இருப்பிடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரபாவில் இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு பற்றி கடும் கவலை அடைவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கமரூன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். “போரை உடன் நிறுத்தி உதவிகளை வழங்குவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது, தொடர்ந்து நீடித்த மற்றும் நிலையான போர் நிறுத்தம் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம், ரபாவின் நிலைமை பெரும் கவலை அளிப்பதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஸ்லொட் குறிப்பிட்டுள்ளார். “காசாவின் பொதுமக்கள் பலரும் தெற்கிற்கு தப்பிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறான மக்கள் நெரிசல் கொண்ட பகுதி ஒன்றில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினால் பெரும் உயிரிழப்புகள் மாத்திரமன்றி ஏற்படும் பாரிய மனிதாபிமான பேரழிவை எவ்வாறு பார்ப்பது என்பது கடினமாக உள்ளது. இது நியாயப்படுத்த முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலிய கொடிய தாக்குதலால் தப்பிச் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள காசாவின் ரபா நகரை இலக்கு வைப்பதற்கு எதிராக” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடி போர் நிறுத்தம் ஒன்றும் அந்த அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
மறுபுறம் தமது நிலப்பகுதியில் பலஸ்தீனர்களின் பாரிய இடம்பெயர்வொன்றுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று எகிப்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. தமது நிலத்தில் இருந்து துரருத்தும் இஸ்ரேல் மீண்டும் தமது நிலத்திற்கு திரும்புவதற்கு அனுமதிக்காது என்று பலஸ்தீனர்கள் அஞ்சுகின்றனர்.
ரபா தவிர காசாவின் மற்ற பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் நேற்றுக் காலை உக்கிர வான் தாக்குதல்கள் நீடித்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 112 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,176 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 67,784 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை ஒருவாரத்திற்கு முன் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்த 6 வயது சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதேபோன்று அவர்களை மீட்க அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் குழுவினர்களின் உடல்கள் காசா நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக பலஸ்தீன மீட்புக் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.