பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘இனப்படுகொலை’ புரிந்துவருவதாக பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
யூதர்களை ஒழித்துக்கட்ட ஹிட்லர் மேற்கொண்ட பிரசாரத்தை ஒத்து இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் ஒப்பீடு செய்து விமர்சித்துள்ளார்.
பிரேசிலிய ஜனாதிபதியின் அந்தக் கருத்துகள் ‘வெட்கக்கேடானவை, கடுமையானவை’ என்று பதிலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சாடியுள்ளார்.
தொடர்ந்து, கண்டனத்தைத் தெரிவிக்க பிரேசிலியத் தூதரை தமது அரசாங்கம் அழைத்திருப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.அதேநேரம், பிரேசிலிய ஜனாதிபதியின் கருத்துகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள காசா மக்கள் அனுபவித்து வரும் துயரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாக ஹமாஸ் இயக்கம் கூறியுள்ளது.
எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றிய உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது லுௗலா இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தார்.
“காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள்போன்று வரலாற்றில் வேறெங்கும் இதுவரை நடந்தது இல்லை. இருப்பினும், ஒரே ஒரு முறை, யூதர்களைக் கொல்ல ஹிட்லர் முடிவெடுத்தபோது இதேபோன்று நடந்தது” என்றார்.