தெற்கு லெபனானில் உள்ள கிராமங்கள் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதல்களில் ஆறு சிறுவர்கள் உட்பட பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் ரொக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அல் சவானா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நபாத்தி நகரில் கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் நான்கு சிறுவர்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் கொல்லப்பட்டதாக அந்த நகர மருத்துவமனையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பிறிதொரு தாக்குதலில் நான்கு ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக அந்தக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது வீசப்பட்ட ரொக்கெட் குண்டுகளில் ஒரு இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டு மேலும் எட்டுப் பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
இந்த பரஸ்பர தாக்குதல்களில் ஏற்கனவே 170க்கும் அதிகமான ஹிஸ்புல்லா போராளிகள் உட்பட 200 க்கும் அதிகமான லெபனானியர் கொல்லப்பட்டு சுமார் ஒரு டஜன் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் ஐந்து இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.