இந்திய சமுத்திரத்தில் கடல் பயணத்தை சுதந்திரமாக மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் வர்மாவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு வருகை தந்த நான்காவது அமெரிக்க பிரதிநிதி ரிச்சர்ட் வர்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
சர்வதேச பாதுகாப்பு தொடர்பான விடயங்களும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. செங்கடலில் இடம்பெறும் கடற்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு பிரதி இராஜாங்க செயலாளர் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.