அண்மைக்காலமாக பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட போது, சந்தேக நபர் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
எனவே சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் பதிலடித் தாக்குதல் மேற்கொள்ள சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து சந்தேக நபர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். அத்துடன் துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த மீல்ல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய இராணுவ சிப்பாயிடம் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் எட்டாம் திகதி வெல்லம்பிட்டிய கிட்டம்பஹுவ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்றதாகவும், ஜூன் 17 ஆம் திகதி மீட்டியாகொட சீனிகம விகாரைக்கு அருகில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான விதுரனின் மைத்துனரான துலாஜ் என்பவரை கொலை செய்ய முற்பட்டதாகவும் இந்த சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த(21) ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட இறைச்சிக்கடைக்காரர் கொலையுடனும் இந்த சந்தேக நபர் தொடர்புற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.