மட்டக்களப்பு மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையை சிறைச்சாலையாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ ஆராய்ந்தார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடிக்கு தீர்வாக சுகாதார அமைச்சுக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களையும் சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து தீர்மானித்துள்ளன. அதற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மாந்தீவு வைத்தியசாலைக்கு அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். தற்போது 32 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளமையினால் கைதிகளிடையே நிலவும் இடவசதி பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கிலேயே ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலை கட்டடங்களும், மட்டக்களப்பு மாந்தீவில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதியமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, சுதாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.