சிறு அளவிலான விவசாய தொழில் முயற்சி வேலைத்திட்டத்தில், பணிப்பாளர் உள்ளிட்ட அங்கு பணிபுரிந்த சிலர் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில், அவ் வேலைத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு உரிய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்போகத்தில் சோளம் பயிர்ச்செய்கைக்கான விதை, உரம் மற்றும் அதற்கான நிலங்களைப் பண்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருந்த நிதியை உரிய காலத்தில் வழங்க இவர்கள் தவறியுள்ளனர். இதற்காக இவர்கள் அத்திட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
சில மாவட்டங்களில் இதுவரையும் விதை மற்றும் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நிதியை வழங்காமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதேவேளை சில
பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதைகள் தரமற்றவை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை, அநுராதபுரம், மொனராகலை, அம்பாறை மற்றும் பதுளை உள்ளிட்ட
மாவட்டங்களுக்கு சோள பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்காக அரசாங்கம விவசாயிகளுக்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிதி உரிய காலத்தில் வழங்கப்படாமையால் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
அந்த விவசாயிகள் தம்மிடமுள்ள தங்க நகைகளை அடகு வைத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.