முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் அந்தந்த பிரதேசங்களில் பழுதடைந்துள்ள வீதிகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மாகாண சபையின் ஏற்பாட்டில் அல்லது வரவு செலவுத்திட்டத்தின் கீழ் இவ்வீதிகளை மீள் அபிவிருத்தி செய்து தருமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீதித் திட்டங்களின் கீழ், முன்னுரிமையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீதிகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கொலன்னாவ குருனியாவத்தை இரண்டாவது ஒழுங்கை, கித்தம்பஹுவ கால்வாய் வீதியைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தினர்.
கித்தம்பஹுவ கால்வாயை அண்மித்த குருனியாவத்தை இரண்டாவது லேன் பகுதியில் தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட தினசரி சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றவர்களாவர். கால்வாயை ஒட்டி, சுமார் பத்து அடி அகலம் கொண்ட இந்த பகுதிக்கு செல்லும் பிரதான பாதை தற்போது பாதிப்படைந்து போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் உள்ளது. மண் நிரப்பப்பட்ட கால்வாயின் எல்லைக்குட்பட்ட வீதி வெள்ள காலங்களில் முற்றாக நீரில் மூழ்குவதுடன், விலங்குகள் தோண்டுவதால் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் அமைச்சரிடம் இதன்போது சுட்டிக்காட்டினர்.
மேலும், சிறு குழந்தைகள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில், ஆழமான வாய்க்கால் எல்லையில், எவ்வித பாதுகாப்பு அமைப்பும் இன்றி, பாதை மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதோடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தனர். அனைத்து இடங்களையும் அவதானித்த அமைச்சர், எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லையோர வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்குள் கால்வாயை எல்லையாகக் கொண்ட கொலன்னாவ சலலிஹினி மாவத்தை, தெபா கால்வாய் பகுதியில் வெள்ளம் மற்றும் ஏனைய காரணங்களால் தொடர்ந்தும் பாழடைந்து வரும் பல வீதிகள் அமைச்சர் மற்றும் குழுவினரால் அவதானிக்கப்பட்டது.
அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் கருத்துப் பரிமாறிக்கொண்ட அமைச்சர், எதிர்காலத்தில் தொடங்கப்படவுள்ள கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த வீதியை மூன்று மாதங்களுக்குள் புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.