சர்வதேச அளவில் கண்டனங்கள் அதிகரித்தபோதும் தெற்கு காசாவில் ரபா மீதான “வலுவான” இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதில் இஸ்ரேல் உறுதி பூண்டுள்ளது. எனினும் 1.5 மில்லியன் பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த நகர் மீதான தாக்குதல் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச அளவில் எச்சரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து வெளியிட்டிருக்கும் கூட்டு அறிக்கையில், “இந்தப் பாதையில் செல்ல வேண்டாம்” என்று இஸ்ரேலை வலியுறுத்தி இருப்பதோடு, பாரிய மனித உயிரிழப்புகளை தவிர்க்கும்படி கேட்டுள்ளன.
“இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது அழிவுகரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கும் அந்த நாடுகள், “பொதுமக்கள் செல்வதற்கு வேறு இடம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளன.
வடக்கு மற்றும் தெற்கு காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் முன்னெடுத்து வரும் இடைவிடாத தாக்குதல்களால் துரத்தப்பட்ட மக்களே தற்போது எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவில் சிக்கியுள்ளனர்.
வெளிநாடுகள் மற்றும் உதவி நிறுவனங்களின் அழுத்தங்கள் அதிகரித்தபோதும் ரபாவை நோக்கி முன்னேறி ஹமாஸ் படைப்பிரிவை ஒழிப்பதாக இஸ்ரேல் உறுதியாகக் கூறி வருகிறது.
“நாம் முழுமையான வெற்றி வரை போராடுவோம் என்பதோடு போர் வலயங்களில் இருந்து பொதுமக்களை வெளியேறுவதற்கு நாம் அனுமதித்த பின் ரபாவிலும் வலுவான படை நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த புதனன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே நெதன்யாகுவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
பேச்சில் இழுபறி
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அங்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் உடன்படிக்கை ஒன்றுக்காக தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
“கெய்ரோவில் எமது பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸின் எந்த புதிய முன்மொழிவையும் இஸ்ரேல் பெறவில்லை” என்று நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் தனது நிலைப்பாட்டை தளர்த்தும் வரை இஸ்ரேல் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் இணையப்போவதில்லை என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் நேரடியாக பதில் அளிக்காத நெதன்யாகு, “ஹமாஸ் தனது மாயையான கோரிக்கைகளை கைவிட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். அதனை அவர்கள் கைவிட்டால் எம்மால் முன்னோக்கி நகர முடியும்” என்று கூறினார்.
அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் பணிப்பாளர் வில்லியம் பர்ன்ஸ் கடந்த செவ்வாயன்று கெய்ரோ சென்று இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதோடு அவருடன் இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பர்னியும் இணைந்தார். ஹமாஸ் தூதுக்குழு ஒன்று கடந்த புதனன்று கெய்ரோ சென்றடைந்தது.
மேற்குக் கரையில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், விரைவான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதோடு பலஸ்தீனர்கள் மேலும் அவலத்தை சந்திப்பதை தடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
முற்றுகையில் மருத்துவமனை
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நேற்று மூன்றாவது நாளை எட்டிய நிலையில் இஸ்ரேல் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்தது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 107 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கான் யூனிஸ் நகரில் இருக்கும் நாசர் மருத்துவமனையின் எலும்பியல் பிரிவு மீது நடத்தப்பட்ட செல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்ததாக அது குறிப்பிட்டது.
தெற்கு காசாவின் மிகப்பெரிய மருத்துவ வசதியாக உள்ள இந்த மருத்துவமனையை சுற்றி கடந்த பல வாரங்களால் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இங்குள்ள மருத்துவ பணியாளர்கள், நோயாளர்கள் மற்றும் அடைக்கலம் பெற்றிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கடினமான சூழலிலும் மருத்துவ பணியாளர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த மருத்துவமனை உணவு மற்றும் நீர் இன்றி ஒரு மாதமாக முற்றுகையில் இருப்பதாக நுர்ஸ் முஹமது அல் அஸ்டால் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
“இரவு நேரத்தில் டாங்கிகள் மருத்துவமனை மீது கடுமையாக தாக்குவதோடு நாசர் மருத்துவமனையை சூழவிருக்கும் கட்டடங்களின் கூரை மீது இருக்கும் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் சூடு நடத்தும் நிலையில் இடம்பெயர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்” என்று அவர் கூறினார்.
இந்த மருத்துவமனையை அணுகுவது மறுக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் மருத்துவ பணியாளர்களுடனான தொடர்பை இழந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காசாவில் உள்ள மருத்துவமனைகள் “முழுமையாக நிரம்பி வழிகின்றன” என்று ரபாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் பலஸ்தீன பிரதிநிதியான ரிக் பீபர்கோன் தெரிவித்துள்ளார்.
காசாவில் முழுமையாக இயங்கும் மருத்துவமனைகள் இல்லாதிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு வாரத்திற்கு முன்னர் கூறியிருந்தது. எனினும் இஸ்ரேலிய தாக்குதல்களில் அங்கு 68,300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28,663 ஆக அதிகரித்துள்ளது.