தென்னிந்தியாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நயன்தாரா கடந்த வருடம் ஜவான் மூலம் பாலிவுட் பக்கம் சென்றார். முதல் படமே ஷாருக்கானுடன் அமைந்தது அவருக்கான ஜாக்பாட் ஆக இருந்தது. அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் அதில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸை திணறடித்த அப்படம் தற்போது விருதுகளை வாரி குவித்து இருக்கிறது. அதன்படி சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் ஜவான் ஒரு விருதை மட்டுமே கைப்பற்றியது. ஆனால் தற்போது நடந்து முடிந்திருக்கும் தாதாசாகேப் பால்கே விருது விழாவில் ஜவான் மாஸ் காட்டி இருக்கிறது.அதேபோல் கடந்த வருடம் வெளிவந்த அனிமல் படத்திற்கும் ஏகப்பட்ட விருதுகள் கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.மேலும் நம்ம ஊரு ராக் ஸ்டார் அனிருத் ஜவான் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றுள்ளார். அதேபோல் சிறந்த இயக்குனர் (விமர்சகர்கள்) பிரிவில் அட்லி விருதை வென்றுள்ளார். இது தவிர அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, வில்லன் பாபி தியோல் ஆகியோரும் விருதுகளை தட்டி தூக்கி இருக்கின்றனர்.விமர்சகர்கள் பிரிவில் சிறந்த திரைப்படம் என 12த் பெயில் விருது பெற்றிருக்கிறது. இது தவிர இசை துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக பாடகர் கே ஜே யேசுதாஸ் கௌரவிக்கப்பட்டார். அவருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.இப்படி பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த விருது விழாவிற்கு நயன்தாரா மஞ்சள் நிற சேலையில் அட்டகாசமாக வந்திருந்தார். தங்கம் போல் ஜொலி ஜொலித்த அவரை மீடியாக்கள் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தனர். விருது வாங்கியவுடன் அதை சந்தோஷமாக தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கும் நயன் தன் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.