கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் அரச சேவையிலிருந்து நாளை செவ்வாய்க்கிழமை(13) ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.
தமிழரின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான இன்னியம் நிகழ்வுடன் அரசாங்க அதிபர் மற்றும் அவரின் துணைவர், அரசாங்க அதிபரின் தாயார் மற்றும் அவரின் மகள், ஆகியோர் வரவேற்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரின் சேவை தொடர்பில் அதிகாரிகளால் பாராட்டுக் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் அரசாங்க அதிபரை கௌரவப்படுத்தும் நோக்கில் வாழ்த்துப்பாக்களும், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கரைச்சி உதவி அரசாங்க அதிபர், வட கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவி செயலாளர், முகாமைத்துவ பயிற்சி நிலைய பயிற்சி உத்தியோகத்தர், மட்டக்களப்பு கூட்டுறவு திணைக்கள உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி, தொடர்ந்து தற்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமை ஆற்றிவரும் இவர் தனது அரச பணியினை நாளையுடன் நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சி மாவட்டம் 1984 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், அந்த மாவட்டத்திலிருந்து அரச நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது நிர்வாக சேவை அதிகாரி இவரென்பது விசேட அம்சமாகும்.
இலங்கை அரச நிர்வாக சேவையில் இவர் தொடர்ச்சியாக 32 வருடங்கள் கடமையை நிறைவேற்றியதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகவும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர், கிளை தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.