யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரால் சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் தெரிவிக்கையில், “வலி வடக்கில் இன்னும் 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறுஇருக்கையில், ஜனாதிபதியும் இதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசத்தில் நில அளவீடு செய்ததாக குரும்பசிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கிராம உத்தியோகத்தர்களுக்கும், பிரதேச செயலாளருக்கும் தெரியாமல் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை அளவீடு செய்ய, வருவதில்லை என சுட்டிக்காட்டும் சுகிர்தன், பிரதேச செயலாளர் மக்களிடம் பொய்களை கூறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை, பலாலி விமான நிலையத்தை அண்டிய மக்களின் காணிகளில் விமான நிலையம் என்ற பெயரில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுவும் நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.