ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் போன்றவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். அவற்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எந்நேரத்திலும் மீறப்படலாம் என்பதால் அவை மழகவும் ஆபத்தானவை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், இந்த சட்டங்களுக்கு எதிராக இளைஞர்களும் மக்களும் ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டும் என்றார்.
"ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகியவை மிகவும் ஆபத்தானவை. அரசு விரும்பினால், இந்தச் சட்டங்களில் எந்த நேரத்திலும் மக்களின் அடிப்படை உரிமைகளை எளிதில் மீறும் வகையில் ஏற்பாடுகள் உள்ளன.
அரசாங்கம் முந்தைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயல்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது இந்தச் சட்டங்களை அரசாங்கம் எப்படிப் பயன்படுத்துமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அவர்கள் விரும்பியபடி பயன்படுத்த மக்களுக்கு உரிமை உண்டு.
பொய்யான செய்திகளைப் பரப்பவும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டால், நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களே போதுமானது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட வேண்டும். சிறப்பு சட்டங்கள் தேவையில்லை," என்று அவர் கூறினார்.
குமாரதுங்க, இலங்கையில் தேர்தல் வரவிருப்பதாகவும், இந்தச் சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது சந்தேகமாக இருப்பதாகவும் கூறினார்.
"தேர்தலில் தில்லுமுல்லு செய்ய சில அரசுகள் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட மோசமான அனுபவம் எங்களுக்கு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் ஆண்டில் இந்த சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தச் சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தவும், இரண்டு சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும் இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம்," என்று அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், இந்தச் சட்டங்கள் இந்த முயற்சியில் சர்வதேச ஆதரவைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார்.