யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தினால் அண்ணாமலை மகேந்திரன் என்பவரின் வீடே இவ்வாறு முற்று முழுதாக தீயில் கருகி உள்ளது.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் வீடே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து காணி வாங்குவதற்காக வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் அது முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது.
மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இத் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
அத்தோடு யாழ். நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று மின்கசிவு காரணமாக நேற்றைய தினம் தீக்கிரையாகியமை குறிப்பிடத்தக்கது.