பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.
இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ்வாறு பிரதேச மக்களால் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபையால் கிராமத்தில் முக்கிய பகுதிகளில் வீதி மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. அவை குறுகிய காலங்களில் ஒளிராமல் பழுதடைந்துள்ளது.
தரமான மின்விளக்குகளிற்கு உத்தேச அளவீடு மேற்கொண்டு நிதி ஒதுக்கி பின்னர் தரமற்ற மின்விளக்குகளை பொருத்தியுள்ளார்களென சந்தேகிக்கிறோம்.
இதற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். முக்கிய இடங்களில் மின்விளக்குகள் இவ்வாறு எரியாமையால் குற்ற செயல்கள் நடக்கிறது. வாள்வெட்டு சம்பவங்களும் நடக்கிறது.
அண்மையில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து மறிக்கப்பட்டு வாள்வெட்டு சம்பவமும் இடம்பெற்றது. இவ்வாறான குற்ற செயல்கள் அண்மையில் அதிகரித்துள்ளது.
முன்னர் கிராமத்துக்கு பொறுப்பாக பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த போது குறைவாக இருந்தது. கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அபிருத்திகளிற்கான அரச நிதிகள் வீணாகின்றது.
சட்டவிரோத மது உற்பத்தி அதிகரித்துள்ளது. மதுபானங்களின் விலை அதிகரிப்பினால் இந்த சட்டவிரோத மது உற்பத்தி அதிகரித்துள்ளது.
கசிப்பினை அருந்திய நபர் ஒருவர் நீண்ட காலமாக சுயநினைவிழந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி அவ்வாறானவர்களுக்கு வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கசிப்பினை கட்டுப்படுத்தாமையினால் அரச நிதி இன்னொரு விதமாக வீணான மருத்துவ ரீதியில் செலவாகின்றது. இவ்வாறன விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கிராமங்களிற்கிடையிலான சந்திப்புக்கள் மூலம் தீர்வு காண திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.