கலைஞருக்கு தலைக்கனம் கொஞ்சம் அழகு தான் என்பது போல், தான் இயக்கும் படைப்புகளில் எந்த ஒரு சமரசமும் செய்யாது நினைத்தவாறு திரை கதையை நகர்த்தி ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு, சாதித்து விட்டேன் என்ற தலைக்கனத்தோடு வலம் வருபவர் வெற்றிமாறன்.
ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சினிமா விமர்சகர்களை தாண்டி பார்வையாளர்கள் அனைவரையும் பேச வைத்தது. முன்னணி நடிகர்கள் பலரும் இவரது இயக்கத்தில் நடித்து விடமாட்டோமோ என ஏங்க, இவரோ தனது கதைக்கு, கதாபாத்திரத்திற்கு யார் தேவையோ அவரை மட்டுமே தேர்ந்தெடுத்து தன் படைப்புகளை வெற்றி பெற செய்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த திரைப்படம் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடைமென்ட் சார்பில் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்து இருந்தார்.மலைவாழ் கிராமத்தில் மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறையினரின் அநீதியையும், ஒடுக்கு முறையையும் துணிச்சலாக படமாக்கி இருந்தார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தையும் இயக்கத் தொடங்கி இருந்தார் வெற்றிமாறன்.
விடுதலை இரண்டாம் பாகத்தை முழுவதும் முடிக்க முடியாத நிலையில், கடந்த மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச விழாவில், விடுதலை 1 மற்றும் 2 ன் காட்சிகளை திரையிட்ட போது அங்கு குழுமி இருந்தவர்கள் எழுந்து நின்று பலத்த கரகோஷத்தை எழுப்பினர். சில நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து கேட்கப்பட்ட கரகோசத்தால் நெகிழ்ந்து போயினர் வெற்றிமாறன் மற்றும் அவரது பட குழுவினர்.
விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் 43 லட்சம் ஸ்பான்சர் செய்து வெற்றி மாறனை அவரது குடும்பத்தினருடன் பாரிஸ் மற்றும் நெதர்லாந்துக்கு சுற்றுலா அனுப்பி உள்ளாராம். அதே சமயம் விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் இணைந்த படமும் முடிந்து விட்டது. வெற்றிமாறன் திரும்பி வந்தவுடன் விடுதலை 2 படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பை தொடங்கி சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஒத்த காலில் நிற்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.