அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெல்லாக்'ஸ் (Kellogg's) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிபவர், கேரி பில்னிக் (Gary Pilnick).
அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை குறித்து கேரி பில்னிக் ஒரு பேட்டியில், "இரவு உணவுக்கு கெல்லாக்'ஸ் மற்றும் பால் மற்றும் ஒரு பழம் உண்ண பழகி கொள்ள வேண்டும். இதற்கு ஒரு டாலருக்கும் குறைவாக செலவாகும். " என தெரிவித்தார்.
மேலும் இது அமெரிக்க மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் கேரிக்கு எதிராக பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மளிகை பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் ஏறுவதால், தங்கள் வருவாயில் 11 சதவீதத்திற்கும் மேல் உணவிற்காக மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில் அமெரிக்கர்கள் உள்ளனர்.
காலை உணவை தாண்டி இரவு உணவிற்கும் கெல்லாக்'ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளதாக கேரி தெரிவித்தார்.
கேரி பில்னிக் ஆண்டுதோறும் 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருமானம் பெறுகிறார். இதை தவிர பல ஊக்க தொகைகளும், சலுகைகளும் அவருக்கு நிறுவனம் வழங்கும்.
அத்தோடு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது, மிக அதிக ஊதியம் பெறும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியுள்ளது, அவரது அலட்சிய மனப்பான்மையை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2021-ஐ ஒப்பிடும் போது 2023 இறுதிக்குள் மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கெல்லாக்'ஸ் போன்ற உணவு பண்டங்களில் உள்ள சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் அதனை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கேரியின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.