பூட்டானுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் 13 வது ஐந்தாண்டு திட்டத்திற்கென பத்தாயிரம் கோடி ரூபா உதவித் தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இவ்வறிவிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கேயுடன் இணைந்து கியால்ட்சூன் ஜெட்சன் பெமா வாங்சுக் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்-சேய் மருத்துவமனையை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இம்மருத்துவமனையின் நிர்மாணத்திற்கான முழு நிதியுதவியையும் அளித்த இந்திய அரசாங்கத்திற்கு பூட்டான் பிரதமர் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பூட்டானின் உயரிய குடிமகன் விருதான ‘ஒர்டர் ஒஃப் தி ட்ருக் கியால்போ’ விருது பிரதமர் மோடிக்கு இவ்விஜயத்தின் போது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இவ்விருதைப் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டுப் பிரமுகராக இந்தியப் பிரதமர் விளங்குகிறார்.
பூட்டானுக்கான இரண்டு நாட்கள் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்ப விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வழியனுப்பவென
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்வும் அந்நாட்டு பிரதமரும் விமான நிலையத்திற்கு வருகை தந்து வாழ்த்தி வழியனுப்பியுள்ளனர்.
பூட்டானுக்கான பயணம் குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இப்பயணம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. பூட்டானின் மன்னர், பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு மேலும் வலு சேர்க்கும். அந்நாட்டு மக்களின் அரவணைப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன். பூட்டானுக்கு, இந்தியா எப்போதும் நம்பகமான நண்பராகவும் பங்களாராகவும் இருக்கும்’ என்றுள்ளார்.