லெபனான் ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் 15வது படை குழு நேற்று (01) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய போயகனே விஜயபாகு காலாட் படையணி அணிநடை மைதானத்தில் மரியாதை செலுத்தியது.
லெபனான் ஐ.நா. இடைக்காலப் படைத் தலைமையகத்தின் ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு அடையாள முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில் இராணுவ தளபதியால் தேசியக் கொடி, ஐ.நா. கொடி, இராணுவக் கொடி மற்றும் விஜயபாகு காலாட் படையணி கொடி என்பன 15 வது படை குழுவின் கட்டளை அதிகாரியிடம் வழங்கப்பட்டன.
11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்களைக் கொண்ட 15வது படைக் குழுவின் தளபதியாக லெப்டினன் கேணல் டி.கே.டி. விதானகே ஆர்.எஸ்.பீ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள 15 வது படை குழுவில் இலங்கை கவச வாகனப் படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, விஜயபாகு காலாட் படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, கொமாண்டோ படையணி , விசேட படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ போர்கருவி படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ மகளிர் படையணி, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி போன்றவையை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.