அம்பாறையின் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ஆம் கொலனியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சுமார் 39 இலட்சம் ரூபா பெறுமதியான 20 பவுண் கொண்ட தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து திருடிய தங்க நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்படி வீட்டில் கடந்த வியாழக்கிழமை (14) இரவு திருட்டு இடம்பெற்றதுடன், வீட்டு ஜன்னலை உடைத்து அதன் வழியாக நுழைந்த திருடர்கள் இத்திருட்டை புரிந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தம்மிடம் செய்த முறைப்பாட்டை அடுத்து, தாம் விசாரணை நடத்தி சாளம்பைக்கேணியைச் சேர்ந்த 33, 28, 26 வயதுடைய இச்சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
நோன்பு இரவுவேளை வணக்க வழிபாட்டுக்காக மேற்படி வீட்டிலுள்ளோர் பள்ளிவாசலுக்கு சென்ற போதே இத்திருட்டு இடம்பெற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.