போலியோவில் இருந்து உயிர் தப்பி கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த போல் அலெக்சாண்டர் தனது 78 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
1952 ஆம் ஆண்டு ஆறு வயதில் போலியோ தாக்கியதால் அலெக்சாண்டரின் கழுத்து முதல் பாதம் வரை செயலிழந்தது. அந்த நோயால் அவர் மூச்சு விட சிரமப்பட்டதை அடுத்தே அவர் இரும்பு சிலிண்டருக்குள் வைக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அந்த இயந்திரத்திலேயே கழித்தார்.
அவர் சட்டத் துறையில் பட்டம் பெற்றதோடு வழக்கறிஞராகவும் இருந்தார். அதேபோன்று நினைவுக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அலெக்சாண்டரின் இணைய பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது மரணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயந்திர நுரையீரலுக்குள் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.