கனடாவில் இரு குழந்தைகளை தவறான பெற்றொர்களிடம் கொடுத்த சம்பவம் தொடர்பில் சுமார் எழுபது ஆண்டுகளின் பின்னர் அந்நாட்டின் மனிடோபா முதல்வர் வெப் நியு, பாதிக்கப்பட்ட இருவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
1955 ஆம் ஆண்டு மொனிடோபாவில் உள்ள ஆர்போக் சிறு நகரில் மருத்துவமனையில் பிறந்த ரிச்சர் பியுவைஸ் மற்றும் எட்டி அம்ப்ரோஸ் இருவரும் தமது உண்மையான பெற்றோருக்கு பதில் மற்ற குழந்தையின் பெற்றோரிடம் தவறுதலாக வழங்கப்பட்டனர். இதில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பழங்குடி குடும்பம் ஒன்றில் ரிச்சர் பியுவைஸ் வளர்ந்ததோடு எட்டி அம்ப்ரோஸ் 1,500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் உக்ரைனிய யூத பூர்வீகம் கொண்ட குடும்பம் ஒன்றினால் வளர்க்கப்பட்டார். இருவரதும் பெற்றோர்கள் மாறி இருப்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட மரபணு சோதனையிலேயே கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மொனிடோபா சட்ட சபையில் பேசிய முதல்வர் வெப் நியு, ‘பல தலைமுறைகளாக இரண்டு குழந்தைகள், இரண்டு பெற்றோர்கள் மற்றும் இரண்டு குடும்பங்களைத் துன்புறுத்திய செயல்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.