ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல் நடத்தி எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையை கொன்றதாக பாகிஸ்தான் மீது தலிபான்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகில் இருந்த வீடுகள் மீது நேற்று (18) அதிகாலையில் இந்த பொறுப்பற்ற தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தலிபான் அரசின் பேச்சாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாகிஸ்தான் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும் கடந்த சனிக்கிழமை அடையாளம் காணப்படாத ஆயுதக் குழுவொன்றினால் ஏழு துருப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாக். ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி எச்சரித்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் வடக்கு வசிரிஸ்தானில் ஆப்கான் எல்லைக்கு அருகில் இருக்கும் இராணுவ சோதனைச்சாவடி ஒன்றின் மீதே சனிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அந்தத் தாக்குதல் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்ததாக பாகிஸ்தான் குறிப்பிட்டது. இவ்வாறான தாக்குதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆப்கானின் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உள்ளூர் அரச அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.