இந்தோனேசியாவில் உள்ளூர் பயணிகள் விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும் நேரம் இரு விமானிகளும் உறங்கியது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 25 ஆம் திகதி சுலவெசியில் இருந்து தலைநகர் ஜகார்த்தாவை நோக்கி பயணித்த விமானத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து அந்த இரு விமானிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏர்பஸ் ஏ320 விமானம் சற்று திசைமாறி பயணித்தபோதும் விமானத்தில் இருந்த 153 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பாதுகாப்பான தரையிறங்கியுள்ளனர்.
32 வயதான விமானி விமானம் புறப்பட்டு அரைமணி நேரத்தில் தனது துணை விமானிக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை வழங்கி விட்டு உறக்கத்திற்கு சென்றுள்ளார். அதற்கு 28 வயதான துணை விமானி இணங்கியபோதும் அவரும் உறக்கத்திற்கு சென்றுள்ளார். தனது மனைவி குழந்தை பிரசவித்த நிலையில் ஒரு மாதமான அந்த குழந்தையை பராமரிப்பதில் மனைவிக்கு உதவிய நிலையிலேயே துணை விமானி எதிர்பாராத வகையில் உறக்கத்திற்கு சென்றிருப்பதாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் விமானக் கட்டுப்பாட்டகம் விமானத்துடன் தொடர்புகொள்ள முயன்றபோதும் 28 நிமிடங்களாக தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் விழித்துக்கொண்ட விமானி துணை விமானியும் உறங்கி இருப்பதை அறிந்துகொண்டுள்ளார். அப்போது விமானம் பயணப்பாதையில் இருந்து சற்று விலகி இருப்பதையும் அவர் கண்டுள்ளார்.
தொடர்ந்து ஜகார்த்தா கட்டுப்பாட்டகத்துடன் தொடர்புகொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது.