சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை (2024) மாநாடு இன்று (01) தாமரைத் தடாக அரங்கில் ஆரம்பமாகிறது. இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இம்மாநாடு ஞாயிற்றுக் கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருக்ஷேத்ரா அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்தவகையில், இம்மாநாடு புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெறுகிறது. நிகழ்வை கலாசார அமைச்சு, இந்து சமய, இந்து கலாசார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இதன்போது ரங்கொலி கோலம் போடுதல், ஓவியம் வரைதல், உடைப்போட்டி, கலாசார நிகழ்ச்சிகள், மஹாபாரத கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் கலை நிகழ்சிகள், புத்தாக்க கண்காட்சிகள், கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி என்பனவற்றுடன் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளன.
பெருந்திரளான மக்கள் இதில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்துக்களின் மிகவும் புனித நூலாக கருதப்படும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர்பான சமயச் செயற்பாடுகளுடன், புனித பகவத் கீதைக்கு பக்தர்கள்.அஞ்சலி செலுத்துவதற்காக, இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள குருக்ஷேத்ரா அபிவிருத்தி சபையால் ஆண்டுதோறும் பகவத் கீதை விழா நடத்தப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில், இந்த விழா வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது, இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புனித பகவத் கீதை மாநாட்டை இலங்கையில் நடத்த முன்மொழியப்பட்டது.
இதன்படி, விழாவை இலங்கையில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.