காசாவில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார். மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தற்போது உடல்நலம் தேறி வருவதை அடுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
87 வயதான போப் பிரான்சிஸ், கடந்த புதன்கிழமை ரோம் மருத்துவமனையில் சளி தொந்தரவு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ், இஸ்ரேஸ் ஹமாஸ் போர் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பேசும் போது, "இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரத்தில் தினந்தோரம் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ஆயிரக்ணக்கானோர் உயிரிழப்பது, படுகாயமடைவது, அகதியாவது உள்ளிட்டவை என் மனதை வேதனையில் ஆழ்த்துகிறது."
"இப்படி செய்வதை வைத்து சிறப்பான உலகை கட்டமைக்க முடியும் என நினைக்கின்றீர்களா? உண்மையில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று நினைக்கின்றீர்களா? போதும்! எல்லோரும் சொல்வோம் போதும்! நிறுத்துங்கள்!" என்று தெரிவித்தார்.
அத்தோடு கடந்த சில மாதங்களில் போப் பிரான்சிஸ்-க்கு பலமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொள்வதை போப் பிரான்சிஸ் ரத்து செய்ய நேரிட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரியில் சளி தொந்தரவு காரணமாக உரையை முடிக்க முடியாத நிலை உருவானது.