நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சுமார் 70 வீதமாக குறைவடைந்துள்ள போதிலும் மின்சார உற்பத்தி எதுவித தடையுமின்றி தொடரும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அடுத்த மழைக்காலம் வரை, நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 20 வீதத்தை எட்டும் வரை மின்சார உற்பத்தியை தொடர முடியும்.
"தற்போதைய மின் உற்பத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை, நீர் ஆதாரம் மற்றும் பிற வளங்களை பயன்படுத்தி நாங்கள் நிர்வகிக்கிறோம்.
உலக சந்தையில் நிலக்கரி விலை குறைந்துள்ளதனால், தொடர்ந்து மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்:
நேற்றைய மொத்த மின் உற்பத்தி 49.46 கிகா வாட்ஸ் (GWh) ஆக இருந்தது, மேலும் 25.6% மின்சாரம் நீர் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு 39.4 சதவீதமாக இருந்த அதிகபட்ச மின் உற்பத்தி நிலக்கரி மின் நிலையங்கள் மூலமாகவும், 28.6% மின்சாரம் எரிபொருளின் மூலமாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.