கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருத்தார்.
குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், எஸ். கஜேந்திரன், வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது, கல்வி, காணி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது.
வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவுக்கான நட்டயீடு வழங்கப்படாமை தொடர்பில் ஆராயப்பட்டது. விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பதால் நட்டயீடான காப்புறுதி தொகையை வழங்க முடியாது உள்ளதாக விவசாய காப்புறுதி நிறுவன பிரதிநிதி தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முத்து சிவமோகன் குறிப்பிடுகையில், சுற்று நிருப்பத்தின் அடிப்படையில் பயிர்கள் மூன்றாக பிரிக்கப்படுகிறது. முதல் மாதம், பூப்பதற்கு முன்பதான காலம், பூத்த பின்னர் அறுவடை செய்யும் வரையான காலமாக மூன்றாக பிரிக்கப்படுகிறது.
வெள்ளம் ஏற்பட்ட காலம் பூத்த பின்னரான காலம் என்பதால் அது மூன்றாவது நிலையில் உள்ளதாக கருதப்பட வேண்டும். இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் எழுதியதுடன், அதன் பிரதியை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி உள்ளேன்.
இந்த நிலையில், பூப்பதற்கு முன்பதான 2ம் நிலையில் பயிரழிவு மதிப்பீடு செய்யப்பட்டு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை. அழிவடைந்த காலம் பூத்ததன் பின்னரான மூன்றாவது காலப்பகுதி ஆகும்.
இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் கிளிநொச்சி வருகை தந்தபோது அவரிடம் கூறவில்லையா என அமைச்சர் அவரிடம் வினவினார். தமக்கு அமைச்சர் வந்தது தெரியாது எனவும், அவ்வாறு அறிந்திருந்தால் நிச்சயம் அவரை சந்தித்து இப்பிரச்சினையை முன்வைத்திருப்பேன் எனவும் தெரிவித்தார்.
அமைச்சர் வந்ததை விவசாயிகளுக்கு கூறவில்லையா என கமநல சேவைகள் திணைக்கள அதிகாரியிடம் அமைச்சர் வினவினார். தமக்கும் தெரியாது எனவும், முதல் நாளே தமக்கு நிகழ்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் வருகையில் சிறு தவறு இடம்பெற்றுள்ளதாகவும், அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்து தீர்மானம் ஒன்றினை எடுப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
சிறு போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலபோக அழிவு தொடர்பில் பயிரின் 3ம் நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பப் படிவங்களை பெறுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலாளர்கள் ஒருவாரத்திற்குள் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதாக தெரிவித்தமையை அமைச்சர் குறிப்பில் இடுமாறு தெரிவித்தார்.
ஆனாலும், விவசாய காப்புறுதி நிறுவனம் பயிர் அழிவை 2ம் நிலையாக மதிப்பிட்டு வழங்க முடிவெடுத்து உள்ளமையால், விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற முடியாது உள்ளதாகவும், விவசாயிகள் மூன்றாம் நிலையிலேயே தமக்கு அழிவு ஏற்பட்டதாக கூறுவதால் கருத்து முரண்பாடான நிலை உள்ளதாகவும் கமநல சேவைகள் நிணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் பூத்த பின்னரான காலப்பகுதியாக மூன்றாம் நிலையை மதிப்பீடாக கருதி விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் வகையில் தீர்மானமாக எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
தென்னிலங்கையில் நட்டயீடுகள் கொடுத்து முடிந்திருக்கும். ஆனால் இங்கு பேச்சளவிலேயே உள்ளது. தீர்மானத்தை எடுத்து, விவசாயிகளிடம் விண்ணப்பங்களை பெறுங்கள். எவ்வாறு கொடுக்கலாம் என்பதை அமைச்சர் பேசி பெற்றுக் கொடுங்கள் எனவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில், வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்ட ரீதியாக பூத்த பின்னரான காலப்பகுதியான மூன்றாம் நிலையை விவசாய இழப்பீட்டு காலமாக கருத்தில் எடுத்து நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் சபையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்தார்.