இந்தியாவுடனும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்தும் பங்காளியாக செயற்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியா எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்துடன் கூடிய அணுவாயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய அக்னி 5 ஏவுகணை பரிசோதனை நடாத்தியுள்ளதைத் தொடர்ந்து மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுதந்திரமானதும் திறந்த அடிப்படையிலுமான இந்தோ – பசுபிக் பிராந்திய பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம் சுதந்திரமானதும் பாதுகாப்பானதும் மற்றும் செழிப்பானதுமான இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கான பார்வையை புதுடில்லியும் வொஷிங்டனும் பகிர்ந்து கொண்டுள்ளன. அதன் இலக்கை அடைவதற்காக பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் பங்காளிகளாக செயற்பட்டு வருகின்றோம் என்றும் இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.