இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய நகல் தீர்மானம் ஒன்றின் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
எனினும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் எந்த நம்பிக்கையும் இன்றி தொடர்வதோடு காசாவில் பஞ்ச அபாயம் அதிகரித்தபோதும் அந்தப் பகுதிக்கு ஐ.நா உதவி விநியோகங்களை தடுக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அவசர போர் நிறுத்தம் தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) அமெரிக்கா கொண்டுவந்த நகல் தீர்மானத்தின் மீது ரஷ்யா மற்றும் சீனா தனது வீட்டோ வாக்கை பயன்படுத்திய நிலையிலேயே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடர்பில் பாதுகாப்புச் சபை கடும் பிளவை எதிர்கொண்டுள்ளது. இந்தப் போர் தொடர்பில் கொண்டுவரப்பட்ட எட்டு தீர்மானங்களில் இரண்டு மாத்திரமே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் நிரந்தர அங்கத்துவ நாடான அமெரிக்கா, இஸ்ரேலை நிபந்தனை இன்றி பாதுகாத்து வருவதோடு, அமெரிக்கா மற்றும் சீனா அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற நாடுகளால் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய நகல் தீர்மானத்தில், தற்போது நிலவும் புனித ரமழான் மாதத்தில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக நிபந்தனை இன்றி அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்கவும் மனிதாபிமான உதவிகளுக்கான அனைத்து தடங்கலையும் நீக்க கோரப்பட்டுள்ளது.
மறுபுறம் போர் நிறுத்தம் ஒன்றுக்காக கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதில் ஹமாஸ் அமைப்பு காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வகையில் அண்மையில் முன்மொழிவொன்றை சமர்ப்பித்த நிலையில் இஸ்ரேல் முன்வைத்திருக்கும் பதில் முன்மொழிவு அதற்கு முரணாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரியான முஹமது நஸ்ஸால், அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஆக்கிரமிப்பாளர்கள் காசாவில் இருந்து வாபஸ் பெறாது, நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படாது மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் (வடக்கு காசாவுக்கு) திரும்புவதை தடுப்பதற்கு வலியுறுத்துகின்றனர்’ என்று அவர் கூறினார்.
எனினும் கட்டாரில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் பங்கேற்றிருந்த இஸ்ரேலிய பிரதிநிதிகள் குழுவின் தலைவரான இஸ்ரேல் உளவுப் பிரிவுத் தலைவர் ஆலோசனை பெறுவதற்காக கட்டாரில் இருந்து வெளியேறி இருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உதவிகளுக்கு முட்டுக்கட்டை
இந்நிலையில் இஸ்ரேலின் முற்றுகையால் காசாவில் குறிப்பாக வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு குறித்து ஐ.நா மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்து வரும் நிலையில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் உணவு வாகனங்கள் வடக்கு காசாவுக்கு செல்ல இஸ்ரேல் தொடர்ந்து அனுமதிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அந்த ஐ.நா அமைப்பின் தலைவர் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் கடந்த ஞாயிறன்று பதிவிட்டுள்ளார். இந்த முடிவு பற்றி இஸ்ரேல் நிர்வாகம் ஐ.நாவுக்கு அறிவித்திருப்பதோடு இது ஆத்திரமூட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
‘பலஸ்தீன அகதிகளுக்கான பிரதான உயிர் நாடியான ஐ.நா. அமைப்பு வடக்கு காசாவில் உயிர் காப்பு உதவி வழங்குவதில் இருந்து இன்று தடுக்கப்பட்டுள்ளது. இது ஆத்திரமூட்டுவதோடு மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் போது உயிர்காக்கும் உதவியைத் தடுப்பதை வேண்டுமென்றே செய்கிறது. இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு உணவு, சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக 1949 டிசம்பர் 8 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையினால் உருவாக்கப்பட்டது. 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதால் அகதியாக்கப்பட்ட 700,0000க்கு அதிகமான பலஸ்தீனர்களுக்கு உதவிகள் வழங்கவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் செயற்பாடுகள் கிழக்கு ஜெரூசலம் உட்பட ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரை, காசா, சிரியா, லெபனான் மற்றும் ஜோர்தானில் பரவி உள்ளது.
அவசர தலையீடு இல்லாத பட்சத்தில் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படக் கூடும் என்று ஐ.நா ஆதரவு பெற்ற உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
உடல்கள் மேல் ஏறிச்சென்ற டாங்கிகள்
வடக்கு காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் கடும் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலிய இராணுவம் கான் யூனிஸ் நகரில் உள்ள அல் அமல் மற்றும் நாசர் மருத்துவமனைகள் மீது திடீர் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல டஜன் இஸ்ரேலிய கவச வாகனங்கள் அல் அமல் மருத்துவமனையைச் சுற்றி இருப்பதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
நாசர் மருத்துவ வளாகத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதேபோன்று அண்டைய பத்ன் அல் சமீன் பகுதிகளில் உக்கிர வான் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலின் முற்றுகை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. அங்கு இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் நிலைகொண்டுள்ளன.
இந்த மருத்துவமனையில் அடைக்கலம் பெற்றிருந்த ஆயிரக்கணக்காக பலஸ்தீனர்களில் ஒருவரான ஜமீல் அல் அயூபி, மருத்துவமனை முற்றவெளியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் குறைந்தது நான்கு உடல்கள் மேல் ஏற்றிச் சென்றதை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது அம்புலன்ஸ் வண்டிகளும் தகர்க்கப்பட்டதாக அவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இருக்கும் ஐந்து மாடி கட்டடம் ஒன்றில் வசிக்கும் கரீமி ஐமன் ஹதாத், அந்தக் கட்டடம் வெடிப்புகளால் அதிரும் நிலையில் பல நாட்களாக சமையலறையில் ஒளிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
‘டாங்கிகள் அவ்வப்போது செல் குண்டுகள் வீசுகின்றன’ என்று கூறிய அவர் ‘அது பயங்கரமாக உள்ளது’ என்று விபரித்தார்.
இதேநேரம் டெயிர் அல் பலா பகுதியில் கடந்த ஞாயிறு இரவு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சல்மான் குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய காசாவின் சிறு நகரான டெயிர் அல் பலாஹ்வில் இஸ்ரேல் இராணுவத்தின் உத்தரவை அடுத்து பலஸ்தீனர்கள் பலர் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 27 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எகிப்து எல்லைக்கு அருகில் இருக்கும் சிறு நகர் ஒன்றில் உள்ள ஐந்து வீடுகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் இஸ்ரேலிய இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.