இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும் எனவும், இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டை முதன்மைப்படுத்தி, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவை வலுப்படுத்துவதே எமது நோக்கம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் ஏழாவது நிகழ்வு நேற்று (22) மாத்தளையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்தை கூறினார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளையும் பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைச்சர் தொடர்ந்தும் பேசுகையில்,
“ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன எமது பொருளாதார கொள்கையை மாற்றியமைத்ததால் நாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டன.
ஒவ்வொரு முறையும் இந்த நாடு பொருளாதாரத்திலிருந்து மீள முயற்சிக்கும் போது எப்பொழுதும் பெருமை பேசும் இந்தக் குழு ஆயிரக்கணக்கான இளைஞர்களை தவறாக வழிநடத்தி கலவரத்தில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்க்கையை அழித்துள்ளது
இது வரலாறு முழுவதும் பல சிக்கல்களுக்கு வழிவகுத்தது. இவ்வாறானவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மூன்று தசாப்த கால ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டுவர துணிச்சலான முடிவுகளை எடுத்தோம். அந்த தருணத்தைப் போலவே, ஒரு தேசமாக இந்த நாட்டை சிறந்த எதிர்காலத்திற்காக அபிவிருத்தி செய்ய துணிச்சலான மற்றும் நேர்தியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இது ஒரு முக்கியமான தருணம். நாம் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் வழங்கியுள்ளேன் .
இஸ்ரேலில் இலங்கைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் ஒப்பந்தங்கள் கைச்சாதப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் வீடு சார்ந்த பராமரிப்பு, ஹோட்டல்கள், உணவகங்கள், நிர்மாணம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இலங்கைப் பணியாளர்களுக்கு வரும் நாட்களில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளன.
அவ்வாறே இஸ்ரேலில் இருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்புக்கள் நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படும். இவை ஒருபோதும் எனது தனிப்பட்ட இலாபத்துக்காக பயன்படுத்தப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
இவ் வேலை வாய்ப்புகளுக்காக இளைஞர்கள் சென்றவுடன் , அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
நம்நாடு தெற்காசியாவிலேயே அதிவேக சுற்றுலா வளர்ச்சியை அடைந்து, உலகின் முதல் பத்து இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் கூறினார்.