திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் அப் பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்துவருகின்றனர்.
இப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ் மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை எற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் மரதன் ஓடிய மாணவனின் மரணத்தை தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர்ப் பலகைகள் சேதமாக்கப்பட்டன.
இதனையடுத்து தங்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி வைத்தியர்கள் வெளியேறினர்.
இதனால் அன்றிலிருந்து நேற்று(18) திங்கட்கிழமை வரை ஒரு வாரகாலமாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்வித வைத்தியசேவைகளும் நடைபெறவில்லை. இதுதொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அமைப்புகள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றனர்.
இதேவேளை அரச வைத்தியர்கள் சங்கத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவனின் மரணம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார், வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளன. இருந்தபோதிலும் கடந்த ஒரு வாரமாக வைத்தியசேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.