சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்திய இளைஞர் ஒருவர், அம்மலைக்குச் செல்லும் பாதையில் எஹல கனுவ பிரதேசத்தில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியிலிருந்து 100 மீற்றர் பாறையில் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞர், சிவனொளிபாத மலைக்குச் செல்லும் பாதையில் மற்றுமொரு குழுவினருடன் சென்று கொண்டிருந்த போது நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிவனொளிபாத உடமலுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இவ்வாறு விழுந்த இளைஞரை மீட்டு உடமலுவவுக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.