எந்தவொரு பொருளாதார கஷ்டம் வந்தாலும் மாணவ, மாணவிகள் கல்வியை கைவிடக் கூடாது. கல்வியில் தான் எமது எதிர்காலம் உள்ளது என பேராசிரியர் திஸ்ஸவித்தாரண தெரிவித்தார்.
கிண்ணியா குறிஞ்சான்கேனி NAMS உயர் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி முஸ்தப் முகமட் ஏற்பாட்டில் கல்வி உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே பேராசிரியர் திஸ்ஸவித்தாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நாட்டின் எதிர்காலம் இன்று கேள்விக்குரியாகியுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு சரியான கல்வித் திட்டம் இல்லாமையால் இன்று சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. அதனால் கல்வியை கைவிடாது அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எவ்வாறான கஷ்டங்கள் வந்தாலும் கல்வியை கைவிட முயலும் மாணவ, மாணவிகளுக்கு லங்கா சமசமாஜக் கட்சி அதற்கான மாற்றுவழியை ஏற்படுத்தி கொடுக்க தயாராகவுள்ளது.
நான் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சராக இருந்த காலத்தில் விஞ்ஞான பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் தொழில் நுட்ப பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு நவீன தொழில்நுட்பம் ஊடாக பொருளாதார வளப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது நான் அந்த அமைச்சு பதவியில் இல்லாததால் அத்திட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை.
எமது கட்சி தமிழ், சிங்களம், முஸ்லிம் இனங்களுக்கிடையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் கட்சியாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் லங்கா சமசமாஜகட்சி சார்பில் மூவினத்தையும் சார்ந்தவர்களை சம அமைப்பாளர்களாக நியமிக்கவுள்ளோம் என மேலும் அவர் தெரிவித்தார்.