காசாவில் இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத ரபா மீதான படை நடவடிக்கை ஒன்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுடன் சந்திப்பு ஒன்றுக்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
தெற்கு காசாவில் எகிப்து எல்லையில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதில் இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாக உள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவுடனான சந்திப்புக்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தபோதும் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் செயலுக்கு அதிருப்தியை வெளியிட்டு அந்தப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் ரத்துச் செய்திருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலுடனான சந்திப்புக்கு வசதியான திகதி ஒன்று பற்றி ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் பரிக் ஜூன் பிரியர் புதனன்று (27) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வலியுறுத்தி பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாதது குறித்தே இஸ்ரேல் தனது கோபத்தை வெளியிட்டிருந்தது.
ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார். இது பாரிய உயிர்ச் சேதங்களுக்கு காரணமாகும் என்று நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் எச்சரித்து வருகின்றன.
இந்த நடவடிக்கை காசாவில் படுகொலைகளுக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் ரபாவுக்குள் துருப்புகளை அனுப்ப இஸ்ரேல் தீர்மானித்திருப்பதாகவும் தேவை ஏற்படின் அமெரிக்காவின் ஆதரவு இன்றியே அதனைச் செய்வதாகவும் நெதன்யாகு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
பாதுகாப்புச் சபையில் அவசர போர் நிறுத்தத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும் காசாவின் சூழல் அப்படியே நீடித்து வருகிறது.
‘வடக்கு காசாவில் பஞ்ச நிலைமை உண்மையாவதை நெருங்கி இருப்பதாக’ ஐக்கிய நாடுகள் சபை புதனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது. ‘தொடரும் தாக்குதல்கள் மற்றும் அந்தப் பகுதியை அணுகுவதற்கு இருக்கும் தடைகள் காரணமாக காசாவில் சுகாதார கட்டமைப்பு வீழ்ச்சி கண்டிருப்பதாகவும்’ அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் கணிசமான குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பதாகவும் காசாவில் போர் ஆயுதமாக அது பட்டினியை பயன்படுத்துவது நம்பத்தகுந்த அளவில் இருப்பதாகவும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க், பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த நோக்கம் உறுதி செய்யப்பட்டால் அது போர் குற்றமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவுக்கான உதவி விநியோகங்களை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் காசாவுடனான எகிப்து எல்லையில் உதவிகளை ஏற்றிய லொறிகள் வரிசையில் காத்துள்ளன. தரைவழியாக உதவிகள் செல்வதில் தடங்கல் இருக்கும் சூழலில் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் காசாவுக்கு வானில் இருந்து உதவிகளை போட்டு வருகின்றன. எனினும் அது செயல்திறன் கொண்டதாக இல்லை என்று கூறப்படுகிறது.
வடக்கு காசாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முஹமது நயீம் அல் நஜ்ஜார் என்ற சிறுவன் உயிரிழந்திருப்பதை கமால் அத்வான் மருத்துவமனை நேற்று அறிவித்தது.
காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்கனவே 27 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
நிராயுதபாணிகள் கொலை
இந்நிலையில் காசாவில் குண்டுகள் விழுந்த வண்ணம் இருப்பதோடு மோதல்களும் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேலிய துருப்புகள் நெருங்கிய தூரத்தில் இருந்து நிராயுதபாணியான இரு பலஸ்தீனர்களை சுட்டுக் கொன்று அவர்களின் உடலை இராணுவ புல்டோசரினால் மணலில் புதைக்கும் வீடியோ காட்சிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
சரணடைவதை காட்டும் வெள்ளை துணியை அந்த ஆடர்கள் அசைத்த வண்ணம் எந்த அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தாமல் இருந்தனர்.
அவர்கள் காசா நகரில் தென்மேற்காக உள்ள நப்லூஸ் சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் இருந்ததோடு வடக்கில் தமது வீடுகளுக்கு செல்வதற்கான ஒரே பதையான அல் ரஷீத் வீதி வழியாக திரும்பும் வழியிலேயே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக அல் ஜசீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்தக் கொலைகளை கண்டித்திருக்கும் ஹமாஸ், ‘காசா பகுதியில் நமது மக்களுக்கு எதிரான கொடூரமான அழிப்புப் போரின் பின்னணியில், சியோனிச அரசு மேற்கொள்ளும் குற்றத்தின் அளவுக்கு மற்றொரு சான்றாக இது உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
‘சம்பவத்தின் விபரங்களை மதிப்பிடுவதற்கு முழுமையான மற்றும் தொழில்முறை பரிசோதனை தேவை’ என்று இது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் காசா நகரில் உள்ள பல வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.
நகரின் மேற்கில் உள்ள அஜோய் குடும்ப வீட்டின் மீது இஸ்ரேல் பல சுற்று வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பலரும் காயமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவின் மூன்று மருத்துவமனைகளைச் சூழ தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு அங்குள்ள நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆறு படுகொலை சம்பவங்களில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டு மேலும் 91 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,552 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 74,980 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 8,000 பேர் வரை காணாமல்போன நிலையில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
காசா போர் காரணமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு பாடசாலை பஸ் வண்டி ஒன்று மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் மற்றும் மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் நாளுக்கு நாள் மோதல் நீடித்து வருகிறது. தெற்கு லெபனானில் கடந்த புதனன்று இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குகின்றனர். மறுபுறம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நடத்திய ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.