தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முடியுமானபோதும், காவல்துறை அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாதென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சி எம்.பி.க்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நண்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடந்த சந்திப்பிலேயே ரணில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இங்கு ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் கருத்துரைத்தபோது, வலிகாமம் வடக்கிலுள்ள மக்களின் காணிகளை ‘குத்தகை’ (லீசிங்) அடிப்படையில் விடுவிப்பது தொடர்பில் ஆராய்வோம் என தெரிவித்தார்.
இதனை கடுமையாக எதிர்த்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு, மக்களின் சொந்தக் காணிகளை எப்படி ”குத்தகை”அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவது? இது பெரும் அநீதியல்லவா? இதனை எமது மக்களோ, நாமோ எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு ரணில் பதிலளிக்கையில், காணிகள் விடுவிப்பு தொடர்பில் சகல பக்கங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. நான் , அனைத்து பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும்.
எனவே முதலில் வடக்கு மக்களின் காணிகளை ”குத்தகை ”அடிப்படையில் அம்மக்களுக்கு வழங்குவோம். பின்னர் அதனை அவர்களுக்கு முழுமையாக உரித்தாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
எனினும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன் இந்த காணி விடுவிப்பு வடக்கில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அங்கும் பெருமளவு காணிகள், மேய்ச்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அவையும் விடுவிக்கப்பட வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.
அதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதனும் அதிபருக்கு சுட்டிக்காட்டினார்.
அதனைத்தொடர்ந்து கருத்துரைத்த ரணில், 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறியபோது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதுல்ல நிலையில் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை வழங்குவது ஒரு தீர்வா? முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள். என தெரிவித்துள்ளார்.
அத்துடன் காவல்துறை அதிகாரத்தின் நிலை என்னவென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கேள்வி எழுப்பினர். எனினும் இதற்கு ரணில் பதிலளிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியும்.
ஆனால் அதிலுள்ள காவல்துறை அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.