2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களை கடந்தும் தொடர்கிறது.
உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்காவில் தற்போது நிதி நெருக்கடி நிலவுவதால் தொடர்ந்து உதவுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இவ்வாறுஇருக்கையில், கடந்த திங்கட்கிழமையன்று, உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவது குறித்து நடைபெற்ற உலக தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல், மாநாட்டிற்கு பிறகு நிருபர்களிடம், "உக்ரைனுக்கு தரைப்படைகளை அதிகாரப்பூர்வ முறையில் அனுப்புவதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், படைகளை அனுப்பும் சாத்தியக்கூறு இல்லவே இல்லை என கூற முடியாது" என தெரிவித்தார்.
மேக்ரானின் கருத்தை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலர் கருத்து கூறி வந்தனர்.
மேற்கத்திய துருப்புகளை உக்ரைனுக்கு அனுப்பும் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ (NATO) உறுப்பினர் நாடுகள் நிராகரித்தன. ஆனால், எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் நிராகரிக்கவில்லை.
பிரான்சிலும் எதிர்க்கட்சிகளால் மேக்ரான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
மேக்ரானுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் சபாநாயகர், "உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்பும் முடிவை மேக்ரான் எடுத்தால், அவரது படைக்கு நெப்போலியனின் ராணுவத்திற்கு ஏற்பட்ட கதிதான் நேரும்" என எச்சரித்தார்.