நான் எவ்வளவு காலம் ஜனாதிபதியாக இருக்கப் போகின்றேன் என்பதற்கு முன்னர் நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு தலைவராக இருக்கப் போகின்றீர்கள் என்பது பிரச்சினையானது என்று அரசாங்க நிதிபற்றிய குழுவின் தலைவரான எதிர்க்கட்சி உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை பார்த்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) ஹர்ஷ டி சில்வாவினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஹர்ஷ டி சில்வா அதன்போது கேள்வியெழுப்பி தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் சில கேள்விகளை எழுப்புகின்றேன். அதாவது சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. அடுத்து வரும் அரசாங்கம் இது தொடர்பான வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல காத்திருக்கின்றது. இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது என்று கருதுகின்றேன்.
நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்று எங்களுக்கு சரியாக தெரியாது. இந்நிலையில் நாங்கள் சஜித் பிரேதாச தலைமயில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம். இது தொடர்பில் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன் என்றார்.
அதன்போது பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான் எவ்வளவு காலம் இருக்கப் போகின்றேன் என்பதற்கு முன்னர் நீங்கள் தலைவராக (அரசாங்க நிதிபற்றி குழு தலைவர்) எவ்வளவு காலம் இருக்கப் போகின்றீர்கள் என்பதுதான் பிரச்சினை. சம்பிக்க ரணவக்கவும் போய்விட்டார் என சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தினருடன் நான் ஆரம்பக்கட்ட பேச்சை நடத்திய பின்னர் கட்சித் தலைவர்களை அழைப்பேன். பேச்சுவார்தைகள் முடிவடைந்த பின்னர் அவற்றை உள்ளடக்கிய சட்ட வரைபை நான் பாராளுமன்றத்தில் முன்வைப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.