இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்..!!

tubetamil
0

காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்று (21) 167 ஆவது நாளாகவும் தொடர்ந்ததோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடிக்கும் சூழலில், அவசர போர் நிறுத்தத்தை கோரும் நகல் தீர்மானம் ஒன்றை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.

பணயக்கைதிகளின் விடுதலையைப் பெறும் வகையிலும் தீர்மானத்தை அமைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். உலக நாடுகள் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


சவூதி அரேபியாவுக்குச் சென்ற அவர் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காசாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து ஆறாவது முறையாக அவர் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் அமெரிக்கா காசா விவகாரத்தில் முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. எனினும் அண்மைய வாரங்களில் அது போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த பெப்ரவரியில் அல்ஜீரிய கொண்டுவந்த அவசர போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தின் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா மாற்று நகல் தீர்மானம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வந்தது.

இந்த மாற்றுத் தீர்மானத்தில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்று பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்புச் சபையின் ஆதரவு கிடைப்பதற்கு குறைவான வாய்ப்பே இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது வாக்கெடுப்புக்கு விடப்படும் திகதி பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆரம்பத்தில் சவூதி அரேபியா சென்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசரை சந்தித்த பிளிங்கன் தொடர்ந்து எகிப்து சென்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து விட்டு இஸ்ரேல் செல்லவுள்ளார்.

கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வரும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த நகல் தீர்மானம் வெளியாகியுள்ளது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பு சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் பாதகமாக பதில் அளித்திருப்பதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘முன்மொழிவு தொடர்பில் ஆக்கிரமிப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி எமது சகோதரர்களுக்கு மத்தியஸ்தர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் அளித்திருந்தனர்… பொதுவாக பாதகமான பதிலே கிடைக்கப்பெற்றிருப்பதோடு கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்கப்படவில்லை… உண்மையில், இது மத்தியஸ்தர்கள் முன்னர் வழங்கிய ஒப்புதலை திரும்பப் பெறுவதாக உள்ளது’ என்று பெய்ரூட்டில் புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.

32,000 தாண்டிய உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

‘நாம் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தபோது குண்டு வெடிப்புகள் கேட்க ஆரம்பித்தன’ என்று காசா குடியிருப்பாளரான மஹ்மூத் அபூ அரார் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். தெற்கு நகரான ரபா மீது புதன்கிழமை இரவு இஸ்ரேல் சரமாரித் தாக்குதலை நடத்தியதை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெடிப்புகள் பூகம்பம் போன்று இருந்ததோடு இடிபாடுகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுக்க வேண்டி இருந்தது என்றும் அவர் விபரித்தார்.

தற்போதைய மோதலின் மையப்புள்ளியாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை மாறியுள்ளது. இங்கு பலஸ்தீன போராளிகள் மறைந்திருப்பதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் நான்கு நாட்களுக்கு மேலாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று 140க்கும் அதிகமான போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியது.

எனினும் இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த மருத்துவமனையை சூழவிருக்கும் குடியிருப்பு பகுதிகள் மீதே கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் நோயாளிகள் மத்திரமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்குள்ள மக்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

மத்திய காசாவில் நுஸைரத் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் சிவில் கட்டமைப்பு பெரும்பாலும் வீழ்ச்சி கண்டிருப்பதோடு 2.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்தப் பகுதி பஞ்சம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

காசா மோதலுக்கு மத்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்குள்ள நூர் ஷம்ஸ் அகதி முகாமில் இஸ்ரேல் நேற்று நடத்திய சுற்றிவளைப்பில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நூர் ஷம்ஸ் முகாமில் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட 18 வயது இளைஞர் ஒருவரின் உடலை பலஸ்தீன செம்பிறைச் சங்கம் எடுத்துச் சென்றது’ என்று அந்த அமைப்பு எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதில் வான் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருப்பதாக செம்பிறை சங்கம் கூறியது.

இதன்படி ஆக்கரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனின் நகரில் கார் ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட வான் தாக்குதலில் இரு இஸ்லாமிய ஜிஹாத் போராட்டக் குழுவின் தளபதிகள் உட்பட மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரமல்லாவில் அல் அமரி அகதி முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக்கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதலில் 430க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top