தெற்காசியாவில் சீனா தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள் நிலைநாட்டி வருகிறது . சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் ஆதிக்கம் இந்த பிராந்தியத்தில் கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளுடன் சீனா நட்பைப் பாராட்டி வருவதுடன், தனது முதலீடுகளை குறித்த நாடுகளில் செய்தும் வருகிறது. அத்தோடு நிற்காமல், இந்த நாடுகளில் தனது இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுடன் இருதரப்பு பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்த சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் இந்த மூலோபாய நடவடிக்கை பிராந்திய நாடுகளிடையே ஒரு வித அமைதியின்மையையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இந்து சமுத்திரத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகள் புவியியல் ரீதியிலான அமைவிடம் காரணமாக கடல்சார் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக பெரும் வல்லரசுகளின் இலக்காக இந்நாடுகள் மாறியுள்ளன.
மாலைதீவுகள்: ஒரு கடல்சார் மூலோபாய இலக்கு
சமீபத்திய ஆண்டுகளில், மாலைதீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீடுகளுக்கு அப்பால் சீனா தனது ஈடுபாட்டை இராணுவ ரீதியிலும் விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது.
மாலைதீவுடன் மேம்பாட்டுத் திட்டத்தில் மட்டும் ஈடுபாடு கொண்டிருந்த சீனாவின் உறவு இப்போது இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பை நோக்கியும் நகர்ந்து வருகிறது.
சீனா மாலைதீவுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் அடங்கிய சமீபத்திய ஒப்பந்தங்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாலைதீவுக்கும் சீனாவுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ மற்றும் மூலோபாய ஒப்பந்தங்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
மாலைதீவின் மீது சீனா காட்டி வரும் ஆர்வம் அதன் கடல்சார் மூலோபாயத்தின் முக்கிய பகுதியாகும். இது சீனாவின் வணிக கடல் மார்க்கத்தைப் பாதுகாப்பதையும், இந்தியப் பெருங்கடலில் அதன் கடற்படை இருப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், சீன முதலீடுகள் காரணமாக மாலைதீவின் இறையாண்மை மற்றும் அதிகரித்து வரும் கடனில் அந்நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த கவலைகளும் எழுந்த வண்ணமுள்ளன. இலங்கையைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கும் அபாயம் அந்த நாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அண்மையில் எதிர்வு கூறியிருந்தது. இது தொடர்பாக, சீன சார்பு ஜனாதிபதி முயிஸ்ஸுவின் அரசாங்கத்தை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எச்சரித்தும் வருகின்றன.
மாலைதீவை மையமாக வைத்து மேம்படுத்தப்படும் பாதுகாப்பு உறவுகள் சீனாவைச் சார்ந்து வளர்வதால் ஏற்படும் அபாயங்களை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
சீன – நேபாள பாதுகாப்பு ஒத்துழைப்பு
நேபாளத்துடனான சீனாவின் ஈடுபாடு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களோடு மட்டும் மட்டுப்படத்தப்படாமல் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்புகளுக்கு மேலதிகமாக, சீனா நேபாளத்துடன் பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது இமயமலை எல்லைகளைப் பாதுகாப்பதிலும், அது தொடர்பான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதிலும் உள்ள சீனாவின் அரசியல் நலன்களைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள், இரு நாட்டு கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு வழிவகுத்துள்ளதுடன், நேபாளத்தின் இராணுவ, பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக ஆயுத பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.
சீனாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் நேபாளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று நேபாளம் நம்பியிருக்கிறது.
இருப்பினும், சீனாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை நேபாளம் நாடுவது பல சவால்களை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இந்தியாவுடன் நேபாளத்திற்கு இருக்கும் மத, கலாசார, பண்பாடு ரீதியிலான நெருங்கிய நீண்டகால உறவிற்கு பாதகம் ஏற்படும் நிலை இதனால் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல்சார் அபிலாஷைக்கு இலக்காகும் இலங்கை
சீனாவுடனான இலங்கையின் உறவு கடந்த ஒரு தசாப்த காலத்தில் பல்வேறு அம்சங்களில் கணிசமான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீன முதலீடுகள் நாட்டிற்குள் முக்கிய திட்டங்களை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றிய போதிலும், சீனாவின் திட்டங்கள் இலங்கைக்கு எவ்வித பிரயோசனமும், வருவாயும் வழங்காத “வெள்ளை யானை”. திட்டங்கள் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
துறைமுகம், விமான நிலையம், விளையாட்டரங்கு, நெடுஞ்சாலைகள் என முக்கிய திட்டங்களை நிர்மாணிப்பதில் சீனாவின் முதலீடுகள் பங்களித்தன. இலங்கை மீள முடியாத கடனில் மூழ்குவதற்கு சீனாவின் வெளிப்படைத் தன்மையற்ற கடன்கள் காரணம் எனவும் பரவலாக தெரிவிக்கப்படுகிறது. கடனை மீள செலுத்த முடியாத நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நாட்டிற்கே 99 வருட குத்தகைக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் சீனாவின் கடல்சார் அபிலாஷைகளை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டதன் இரகசியம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
அது மட்டுமல்லாமல், சீனாவின் முதலீடுகள் இலங்கை போன்ற நாடுகளை அதன் கடன் பொறி இராஜதந்திரத்தில் மூழ்கடிக்கச் செய்வதற்கான புவியரசியல் சதி என்றும் வர்ணிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக, சீனாவின் கடன் பொறியில் சிக்குண்டுள்ள நாடுகளைச் சுற்றி இராணுவ கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்திற்கான சீன இராணுவக் குழுவின் விஜயம் இதனை உறுதிப்படுத்தியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்துவதை சீன இராணுவக் குழுவின் பயணம் நோக்கமாகக் கொண்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாரம்பரியமாக இந்தியாவின் செல்வாக்கு மண்டலமாக கருதப்படும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தனது இராணுவ செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக சீனாவின் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
மாலைதீவில், இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளவும் சீன அரசுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாக அறிய வருகிறது.
இதேபோல், இலங்கையில், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இணக்கம் காணப்பட்டதாகவும், நேபாளத்தில், இராணுவ ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தல், கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக, இந்தியா வரலாற்று ரீதியாக அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கும் இந்த பிராந்தியத்தில், புவிசார் அரசியல் தளத்தை மாற்றியமைக்கும் சீனாவின் முயற்சிகளை இந்த சீன இராணுவ அதிகாரிகளின் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பெய்ஜிங்கிற்கும் புது தில்லிக்கும் இடையேயான உறவு, பல்வேறு பிரச்சினைகளால் சமீப காலங்களாக அதிகரித்த வண்ணமுள்ளன. சர்ச்சைக்குரிய ஒரு புள்ளியாக புவியரசியல் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் சீன ஆதிக்கம் செலுத்த முனைவது இந்த இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு பங்களிப்பை அளித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.