காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் காசாவில் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில் காசாவுக்கு குறிப்பிடத்தக்க உணவுகள் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் கடும் பட்டினியால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, பிறந்த குழந்தைகள் எடை குறைவு காரணமாக உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியது.காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 27 பேர் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கடைசியாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காசாவுக்கு பல நாடுகளும் வானில் இருந்து உதவிகளை போட்டு, தொண்டு நிறுவனம் ஒன்று கடல் மார்க்கமாக விநியோகப் பாதை ஒன்றை ஆரம்பித்தபோதும் தரை வழியாக உதவிகள் செல்வது தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறான உதவி விநியோகங்களே செயல்திறன் மிக்கது என தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதில் உதவிகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் வடக்கு காசாவில் உள்ள 300,000 மக்கள் மே மாதத்தில் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா ஆதரவு பெற்ற புதிய அறிக்கை ஒன்று மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் உதவிகளை முடக்கி இருப்பதாகவும் இது பட்டினியை போர் முறையாக பயன்படுத்துவதற்கு சமமானது என்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் (19) குறிப்பிட்டிருந்தார்.
உதவி வாகனங்கள் மீது தாக்குதல்
எவ்வாறாயினும் உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் குவைட் சுற்றுவட்டப்பாதையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதவி லொறிகளை நோக்கி மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில் உதவி லொரிகள் மற்றும் அதற்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. இவ்வாறான தாக்குதல்களில் 400க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவின் அரச ஊடக அலுவலகம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த சில நாட்களாக காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டடங்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று இடம்பெற்ற இவ்வாறான ஒரு தாக்குதலில் வீடு ஒன்று இலக்கு வைக்கப்பட்டதோடு அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தாக்குதல் இடம்பெற்ற விரைவில் அங்கு சென்ற அல் ஜசீரா செய்தியாளர், இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்படுவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மூன்று மாடிக் கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான வடக்கில் உள்ள அல் ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட கடுமையான சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
அல் ஷிபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த நிலையில் தெற்கை நோக்கி செல்லும்படி அவர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டிருந்தது.
அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பெண் ஒருவர் தமது அனுபவத்தை விபரித்துள்ளார். ‘இஸ்ரேலிய வாகனங்கள் மற்றும் புல்டோசர்களுக்கு இடையே நடப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டேன். சிறுவர்கள் பெரும் வேதனையை சந்தித்ததோடு டாங்கிகள் எம்மீது சூடு நடத்தின’ என்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் அல் ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார்.
‘காசா காசாவாக இல்லை. அனைத்து இடங்களும் அழிந்துள்ளன. மூன்று நாட்கள் உண்ணாமல் இருந்தோம். நான் மரணிக்கப்போவதாக உணர்கிறேன்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 104 பேர் கொல்லப்பட்டு 162 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,923 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 74,096 பேர் காயமடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பின்றி தொடரும் பேச்சு
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதோடு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவொன்று எட்டப்பட்டதாக கூறுவது முன்கூட்டியதாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை தொடர்பில் அவதானத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் திட்டமிட்டு வரும் காசாவின் ரபா நகர் மீதான தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தையில் அது பாதகமான விலைவையே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி இஸ்ரேலிய தரைப்படை நுழையாத காசாவின் ஒரே பிரதான நகராக இருந்து வருகிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் திட்டத்தை பூர்த்தி செய்ய ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியமாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார்.
கட்டாரில் இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கு தலைமை வகிக்கும் இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ, இஸ்ரேல் போர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதில் டொஹாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பதில் முன்மொழிவுகள் தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் அவநம்பிக்கை இருப்பதாக பெயர் குறிப்பிடாத இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் சென்னல் 12 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், உண்மையில் உடன்பாடு ஒன்றை நாடுகிறாரா அல்லது காலத்துடன் விளையாடுகிறாரா என்பது தொடர்பில் சந்தேகத்தை அந்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.