ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி "நிலத்தை இழந்த மக்களின் குரல்" எனும் தலைப்பில் கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் நீண்ட காலமாக முயற்சித்து, மக்களிற்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருவதுடன், குறித்த தபாலட்டை அனுப்பும் செயற்பாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவம், வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை, தொழிற்சாலைகள், தொல்பியல் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி இவ்வாறு தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை இழந்த பாதிக்கப்பட்ட 100க்கு மேற்பட்ட காணி உரிமையாளர்களால் காணிகளை விடுவிக்கக் கோரியே இவ்வாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால யுத்தம் காரணமாக காணி ஆவணங்களை பெற முடியாமலும், உறுதிக் காணிகளும் இவ்வாறு மேற்குறித்த தரப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்புக்கள், வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும், அபிவிருத்தி செய்வதிலும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவற்றை விடுவித்து, தமது எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.
தபாலட்டைகள் நிரப்பப்பட்டு ஜெயபுரம் உப தபாலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.