இலங்கையில் பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் வடக்கு” ஜனாதிபதி..!!

tubetamil
0

 காணி உரிமை வழங்கும் 'உறுமய தேசிய வேலைத்திட்டத்தை' ஜூன் மாதமளவில் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  

எந்த இனத்தவராக இருந்தாலும் சட்ட ரீதியான காணி உரிமை தமக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து பிரஜைகளினதும் கனவாகும் என்ற வகையில், அவ்வாறான உரிமை சகலருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.  




யாழ்ப்பாணம் -  ஒட்டகப்புலம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற "உறுமய" காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இரண்டு மில்லியன் மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படும் உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 408 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடையாள ரீதியாக காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

இதற்கு இணையாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழிருந்த காணிகளை விவசாயிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று  (22) பலாலி விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ். பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவினால் காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவற்றை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.  

அதற்கமைய வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு சொந்தமான 235 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதோடு, இந்த காணிகள் அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தும்  வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விதை பொருட்களும் வழங்கப்பட்டன.

அதனையடுத்து, காணி உரிமை பெற்றவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில், இந்த சந்திப்பின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.  

காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் மேலும் குறிப்பிடுகையில்,

அரச காலத்தில் காணி உரிமை மக்களிடமே காணப்பட்டது. பிரித்தானியர் காலத்தில் தரிசு நிலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தினால் காணிகள் அபகரிக்கப்பட்டன. அதன்படி நாட்டின் 80% காணிகள் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அந்த காணிகளுக்கான அனுமதிகளை மக்களுக்கு வழங்கியிருந்தாலும் காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளின் உறுதிகளை மக்களிடம் மீளக் கையளிக்க எதிர்பார்க்கிறோம். அதனால் அனைவருக்கும் காணி உரிமம் வழங்க தீர்மானித்தோம்.

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் காணி உரிமை கிடைக்க வேண்டும். அதற்காக உறுமய வேலைத்திட்டம் அண்மையில் தம்புளையில் ஆரம்பிக்கப்பட்டது.  இன்று ஒரு சிலருக்கு மாத்திரம் அதன் பலன் கிடைத்திருந்தாலும், ஜூன் மாதமளவில் அந்த வேலைத்திட்டத்தினை முழுமையாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.  

மேலும், விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகத்தை தெரிவு செய்துள்ளோம். இது யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்த மாகாணம் நவீன விவசாயத்தைப் பெறுகிறது. அதே சமயம் வருமானமும் அதிகரிக்கிறது.

யுத்தத்தின் பின்னர் பெருமளவிலான காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட வேண்டியிருந்தது. இதுவரை 31,000 ஏக்கர் அரச காணிகளையும், 24,000 ஏக்கர் தனியார் காணிகளையும் அரசாங்கம் விடுவித்துள்ளது. மொத்தம் 63,000 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 1800 ஏக்கர் அரச காணி விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 856 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

2600 ஏக்கர் அரச காணிகளையும் 68 ஏக்கர் தனியார் காணிகளையும் விமானப்படை விடுவித்துள்ளது. மொத்தம் 2600 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்னர், 101 ஏக்கர் காணி மக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இன்று 234 ஏக்கர் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், பல கிராமங்களைச் சேர்ந்த நிலங்களுக்கு வனப் பாதுகாப்புத் துறையினர் வனப் பாதுகாப்புப் பகுதிகள் என பெயரிட்டிருந்தனர். 1985 வரைபடத்தின்படி, செயற்பாடுகளைத் தொடர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.

முன்னதாக இந்த இடத்தின் காணி உரிமையாளர்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பலாலி ஸ்மார்ட் விவசாய வேலைத்திட்டத்தை (Palali Smart Agriculture) ஆரம்பித்து வைத்தனர்.

இந்த காணிகள் அனைத்தும் நவீன விவசாயத் திட்டத்தில் மீண்டும் உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இதை அவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க முப்படைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

மேலும், அவர்களின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக உயர்தர நிறுவனங்களின் பங்களிப்பும் வழங்கப்படுகிறது. மேலும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆதரவும் பெறப்படுகிறது.

இந்த காணிகளை ஒதுக்குவதற்கும் அதே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறந்த பண்ணை இந்த இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், முழு இலங்கைக்கும் முன்மாதிரி பண்ணையாக அது இருக்க வேண்டும்.

அத்துடன், வடக்கில் புதிய வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கின்றோம். யுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை நாம் தற்போது தீர்த்து வருகின்றோம். 

நாங்கள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆரம்பித்தோம். அதனுடன் நாம் மட்டுப்படுத்தவில்லை. மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். மேலும் அவர்களின் வருமான மூலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே, இந்த மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கி வருகிறோம்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இந்த மாகாணத்தில் உள்ள பாரிய சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கு இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் சுற்றுலாத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலையும் ஊக்குவிக்க முடிகிறது. மேலும், முதலீட்டு வலயங்களுக்கும் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்து பத்து வருடங்களில் இந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வடக்கிற்கு வலுவான பொருளாதாரத்தை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் வடக்கை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்ற நான் அனைவரையும் அழைக்கிறேன் என்றார். 

மகா சங்கத்தினர் தலைமையிலான இந்த நிகழ்வில் ஏனைய மதத் தலைவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை வடக்கு தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் உட்பட வட மாகாண அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top